கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தா மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் பயணிப்பது முக்கிய பொழுதுபோக்காக உள்ளது . திருவள்ளுவர் சிலை கடலுக்கு நடுவில் இருப்பதால் உப்பு காற்றால் சிலை சேதமடையாமல் இருக்கும் வண்ணம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக இப்பணி நடைபெறவில்லை. தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலையின் மீது ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை. இந்த சூழலில் நவம்பர் மாதம் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை மற்றும் புயல் காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலையின் மீது படிந்த உப்பு அகற்றப்பட்டு கடுக்காய் ,சுண்ணாம்பு, கருப்பட்டி ஆகிய கலவையும் சிமெண்ட் கலவையும் பூசப்பட்டன. இதையடுத்து ரசாயன கலவை பூசும்பணியும் நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.