கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்து ஜனவரி 31ம் தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி மெரினா கடற்கரை ஓட்டிய வங்க கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைத்தல் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் திட்டத்திற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் அதன் செயல்முறை திட்ட சுருக்கம் வரைவு சாத்திய அபாயங்களின் மதிப்பீடு ஆய்வு , பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டங்கள், அவசரகால மீட்பு திட்டம் குறித்த அறிக்கை ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காகவும் ஆய்வுக்காகவும் வைத்திட வகை செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் பொறுப்பாளர் பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் செயலாண்மை திட்டத்தின் செயல் விளக்கம் குறித்த விளக்கத்துடன் விரிவாக விவரிப்பார். பொதுமக்கள் கருத்து கேட்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டத்தின் பொறுப்பாளர்களால் ஆவன செய்யப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் மதிப்புரைகள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அமைய உள்ள இடம், இத்திட்டத்தால் இடப்பெயர்ச்சியாக வேண்டிய இடங்கள் மற்றும் திட்டத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் அனைவரும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட திட்டம் பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்து வடிவிலோ தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.