பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும், வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்மையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதற்கு அறிக்கை மூலம் பதிலளித்துள்ள அமைச்சர் காந்தி, இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதியே முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியதாகவும், அதில் 1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்தாண்டைப்போலவே இந்த முறையும் பொங்கல் திருநாளில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இலவச வேட்டி சேலைகளுக்காக ரூபாய் 487.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிசாமி மனம்போன போக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இனிமேலாவது பத்திரிகைகள், ஊடகங்களை பார்த்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், குழப்பமான அறிக்கைகளை அவர் வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.