இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் bf.7 உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் ஒருவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், 16 பேருக்கு பரவக்கூடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 40 நாட்களுக்குள் BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் எனவும் இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாற கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தவகை தொற்றால் உயிரிழப்பு மிக குறைவாக காணப்படும் என்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் 90%க்கும் மேற்பட்டோர் 2வது டோஸ் தடுப்பூசியும், 27% பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இதனால் 2வது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவுக்கு 4வது டோஸ் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீன மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான் அங்கு கொரோனா கடுமையாக பரவி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்திய மக்கள் கொரோனா வைரஸின் பல வகைகளில் ஏற்கனவே தப்பிப் பிழைத்துள்ளதால், இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தி அவர்களிடம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.