ஏகாதசி நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதம் இருப்பவர்கள் துவாதசி நாளில் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். துவாதசி விருந்தில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெற வேண்டும். அதனால் அன்று 21 வகையான காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதில் முக்கியமாக அனைத்து காய்கறிகளையும் போட்டு சாம்பார் வைப்பார்கள். அதனை ஏகாதசி சாம்பார் அல்லது ஏகாதசி குழம்பு என்று அழைப்பார்கள். இந்த கதம்ப சாம்பாரை துவாதசி அன்று செய்தாலும் ஏகாதசி சாம்பார் என்றுதான் தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்.
தேவையான பொருட்கள்:
அனைத்துப் பருப்பு வகைகள் சேர்த்து – 300 கிராம்,
21 வகை காய்கறி, கிழங்கு, கீரை வகைகள் சேர்த்து – 600 கிராம்.
தேங்காய் – 1/2 மூடி,
புளி – பெரிய எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் – 2,
தக்காளி – 2.
21 காய்கறிகளுடன் சேர்க்க…
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
சின்ன வெங்காயம் – 10
நீளமாக கீறிய பச்சை மிளகாய் – 4,
தக்காளி – 3,
வெள்ளைப் பூண்டு – 3,
இஞ்சி – 2 இஞ்ச் அளவு,
சாம்பார் பொடி – 5 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மாங்காய் – 1/4 துண்டு,
அரளி நெல்லிக்காய் – 3,
பெரிய நெல்லிக்காய் – 1/2,
நார்த்தங்காய் – 1/4,
தனியா தூள் – 2 டீஸ்பூன்.
தாளிக்க…
நல்லெண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 2 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்.
தாளித்த பின் சேர்க்க வேண்டியவை
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
வெல்லம் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை – சிறிது.
செய்முறை :
1. முதலில் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு என அனைத்துப் பருப்புகளையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
2. காலையில் இந்தப் பருப்புகளை குக்கரில் வேக வைக்கவும். அவை நன்றாக குழந்து வேந்து இருக்க வேண்டும்.
3. பின்னர் அனைத்து காய்கறி, கிழங்கு வகைகள், கீரை வகைகளை நறுக்கி வைக்கவும்.
4. இதனுடன் அரைத்த விழுது, காய்கறிகளுடன் சேர்க்கக் கொடுக்கப்பட்டவை அனைத்தையும் கலந்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
5. பின்னர் இதையும் வேக வைத்த பருப்புகளையும் கலந்து கொதித்து வரும்போது, சர்க்கரை, வெல்லம் சேர்க்கவும்.
6. பிறகு, தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்க வேண்டும். அதன் பின்னர் கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும். இப்போது சத்தும் சுவையும் மிக்க ஏகாதசி குழம்பு அல்லது சாம்பார் ரெடி..