சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
திருவிதாங்கூர் மன்னர் சபரிமலைக்கு வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் தங்க அங்கி பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கோயிலில் இருந்து சபரிமலைக்கு கடந்த 23-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோயில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர். அதன்பின் மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
பின்னர் மாலை 6:30 மணிக்கு சன்னிதானம் வரும் அங்கியை தந்திரியும், மேல்சாந்தியும் ஏற்று வாங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடைபெற உள்ளது. நாளை மதியம் ஐயப்பனுக்கு மீண்டும் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெறும்.
மண்டல பூஜை நாளில் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் கூறவார்கள். அதனால் மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.