மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது. அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாளாகும். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு.
2022ஆம் ஆண்டின் வைகுண்ட ஏகாதசி விழா
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 22-ம்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
டிசம்பர் 22ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் இந்த விழாவினையடுத்து, டிசம்பர் 23 -ம்தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் இறுதி நிகழ்வாக வரும் ஜனவரி 01- ம் தேதி மோகினி அலங்காரமும், முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் ஜனவரி 02- ம் தேதி திங்கள் கிழமையும் நடைபெறுகிறது. ( மார்கழி மாதம் 18ஆம் தேதி). இந்த சொர்க்கவாசல் திறப்பு என்பது சரியாக அதிகாலை 04.45 மணிக்கு நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவானது ஜனவரி – 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது..
மேலும் ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி கடந்த ஆண்டு 2 முறை அதாவது கார்த்திகை கடைசி நாளிலும் மார்கழியிலும் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .