தெருவில் சுற்றித் திரிந்த நாயின் மீது கட்டப்பட்ட தேசிய கொடியை அவிழ்த்து பத்திரமாக வைத்திருந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரசு பேருந்து பணிமனை பகுதியில் நேற்று தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது தேசிய கொடியை கட்டி விடப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி தேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தேசிய கொடியை அவமரியாதை செய்த நபர்கள் மீது பெரியகுளம் வடகரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பெரியகுளம் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று இரவு பெரியகுளம் அரசு பேருந்து பணிமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது கட்டப்பட்டிருந்த தேசிய கொடியை அவிழ்த்து பத்திரமாக வைத்திருந்த பெரியகுளம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றும் திருமுருகன் என்பவர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் தேசிய கொடியை ஒப்படைத்தார்.
மேலும் தேசியக் கொடியை தெருவில் சுற்றித்திரிந்த நாயின் மீது கட்டி அவமரியாதை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.