அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,” தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
பொறியியல் படிப்புகளில் தமிழ்ப் பாடத்தை தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அண்ணா பல்கலை. அறிவித்திருந்தது. அது கூடாது; தமிழ்ப் பாடத்திற்கு தனியாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். அதை அரசு ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவது போதுமானதல்ல. அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை கற்பிக்க தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்திற்கான பாட வேளைகளை அதிகரிக்கவும், அடுத்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டின் இரு பருவங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!(1/4)
— Dr S RAMADOSS (@drramadoss) December 15, 2022