முல்லை பெரியாறில் புதிய அணை : தமிழக , கேரள அதிகாரிகள் இன்று ஆலோசனை..

by Editor News

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள கமிட்டி ஒப்புதல் அளித்த நிலையில் , தமிழ்நாடு , கேரள மாநில அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கேரள நீர்பாசனக்துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய இந்த தொழில்நுட்பத் குழு, புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி ஒப்புதல் அளித்திருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த பிரகதி லேப்ஸ் அண்ட் கன்சல்டன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் தான், கேரள அரசு புதிய அணை தொடர்பான பணியை ஒப்படைத்திருந்தது. இந்த நிறுவனம் அளித்த 3 தொகுதிகள் கொண்ட பரிந்துரைகளை கேரள அரசின் தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து தற்போது அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

தற்போதைய முல்லைப்பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட 125 ஏக்கர் நிலப்பகுதியை கேரள அரசு அடையாளம் கண்டிருப்பதாகவும், அந்த இடத்தில் அணை கட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? என்பது குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய அணையில் இருந்து 366 மீட்டர் கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

தொழில்நுட்ப கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து, கேரள அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி முல்லை பெரியாறில் ரூ.600 கோடியில் புதிய அணை கட்ட கேரள அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கனவே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்பால் அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் கேரளா புதிய அணை திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநில அரசு அதிகாரிகள் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Posts

Leave a Comment