மாமல்லபுரம் அருகே கரையை கடந்த ‘மாண்டஸ் புயல்’ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது.
வங்கக்கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மெல்ல மெல்ல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 7ம் தேதி இரவு 11 .30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என பெயரிடப்பட்ட இந்தப் புயல் மெல்ல வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திராவை ஒட்டி வந்தது. அதன்பின்னர், இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது. இதனையொட்டி தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் பலத்தக்காற்றுடனும் மழை பெய்தது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னை உள்பட வட மாவட்டங்களை மாண்டஸ் புயல் புரட்டிப்போட்டுள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்த ‘மாண்டஸ் புயல்’ , தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என்றும், புயல் கரையைக் கடந்தாலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.