இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் இன்று நடைபெறவுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய முன்னணி வீரர்கள் இந்த தொடரில் அணிக்கு திரும்பியுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதேபோல் இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்கதேச அணியில் இடம்பெறவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனிடையே வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். முகமது ஷமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிர்பூரில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.