ரவுன்ட் ஆப் 16 நக் அவுட் சுற்றில் தென்கொரிய அணி பிரேசில் அணியை டிசம்பர் 6ஆம் தேதி எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்சுகலை விழ்த்தி தென் கொரிய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மஞ்சள் அட்டை கூடுதலாக பெற்றதால் உருகுவே லீக் சுற்றோடு நடையைக் கட்டியது. கத்தாரில் களைகட்டிவரும் 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களுக்கு பல்வேறு அதிர்ச்சிகளை பரிசளித்து வருகிறது. குரூப் H அணிகளுக்கு நாக் அவுட் சுற்றை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
ஏற்கனவே நாக் அவுட் சுற்றை உறுதி செய்த நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, தென் கொரிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே போர்சுகல் வீரர் ஹோர்ட்டா மிரட்டலான கோல் அடித்து அசத்தினார். வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறமுடியும் என்ற வெறியோடு விளையாடிய தென் கொரியா 27 வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன்படுத்தியது.
பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரிய வீரர் ஹீ சான் அசத்தலான கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் ரொனால்டோ சிறப்பாக சோபிக்கவில்லை. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் ஒரேவொரு கோல் அதுவும் பெனால்டி முறையில் தான் அடித்துள்ளார் ரொனால்டோ.
இந்நிலையில், மற்றொரு போட்டியில் கானா – உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு வசப்படும் என்பதால் உருகுவே ஆரம்பம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டியது. ஆட்டத்தின் 26 மற்றும் 32 வது நிமிடங்களில் உருகுவே வீரர் Arrasca இரண்டு கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். இறுதிவரை போராடிய கானா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை இதனால் 2-0 என்ற கோல்கள் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.
தென் கொரியா மற்றும் உருகுவே அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு டிராவை சந்தித்து நான்கு புள்ளிகளோடு சமநிலையில் இருந்ததால் கோல் வித்தியாசம் பார்க்கப்பட்டது அதுவும் சமநிலையில் இருந்ததால் மஞ்சள் அட்டை எடுத்துக்கொள்ளப்பட்டது.
தென் கொரியா ஐந்து மஞ்சள் அட்டையும், உருகுவே எட்டு மஞ்சள் அட்டையும் பெற்றிருந்ததால் தென் கொரிய அணி நாக் அவுட் சுற்றுக்குள் அடியெடுத்துவைத்தது. நடப்பு உலகக் கோப்பையில் ஐந்து ஆசிய அணிகள் பங்கேற்ற நிலையில், அதில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய இரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. ரவுன்ட் ஆப் 16 நக் அவுட் சுற்றில் தென்கொரிய அணி பிரேசில் அணியை டிசம்பர் 6ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதேபோல் போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்து அணியை டிசம்பர் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது.