216
சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவு முத்தி
சிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.
விளக்கம்:
சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார். அப்படி அவரது மனம் தெளியும் போதே அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார். அப்போது சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்று விடுவார். இப்படி சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையை அதன் பிறகு அடியவருக்கு கொடுக்கும்.