டிராம்போலைன் உடற்பயிற்சி

by Editor News

ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதை விட சிறந்த வழிமுறை எதுவுமில்லை. யோகா முதல் ஜிம் வரை எல்லா வகையான உடற்பயிற்சிகளும் உடலை வலுவாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் அத்தகைய பயிற்சி முறைகளை எல்லோராலும் பின்பற்ற முடியாது. உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு கூட சில சமயங்களில் சலிப்பு ஏற்படும்.

அத்தகைய சலிப்பை எதிர்கொள்பவர்களும், உடற்பயிற்சி செய்வதற்கு ஆரம்பக்கட்ட முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எளிமையான பயிற்சி முறையாக `டிராம்போலைன்'(Trampoline) அமைந்திருக்கிறது. வட்ட வடிவ வலை அமைப்பின் மீது நின்று துள்ளி குதித்து விளையாட வைக்கும் இந்த உடற்பயிற்சி பற்றி பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் இந்த பயிற்சியை ஏன் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கி இருக்கிறார்.

”இது சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தை நீக்க உதவுகிறது. மூட்டுகளை பலப்படுத்தவும் செய்கிறது. எலும்பு அடர்த்தியையும் அதிகரிக்க செய்கிறது. தினமும் சிறிது நேரம் டிராம்போலைன் மீது நின்று குதிப்பது உடல் சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது” என்பவர் டிராம்போலைன் மீது குதிப்பது இடுப்பு வலிமைக்கு சிறந்தது என்றும் சொல்கிறார்.

”ஒருவருக்கு வயதாகும்போது, இடுப்புத் தசைகள் தளர்ந்து போய்விடும். முழங்கால்களில் அதிர்வு ஏற்படாத வண்ணம் லாவகமாக குதிப்பது, இடுப்பு வலிமையை அதிகரிக்க உதவும். நீங்கள் இப்போதுதான் டிராம்போலைன் மீது நின்று குதிக்க பழகுகிறீர்கள் என்றால் ஆரம்பத்தில் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் குதியுங்கள். பின்பு ஒவ்வொரு வாரமும் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக குதிக்க தொடங்குங்கள். உடற்பயிற்சி நிபுணரிடம் பயிற்சி பெற்று முறையாக குதிக்க பழகுங்கள். அதுதான் சிறந்த பலனை கொடுக்கும்” என்கிறார், பாக்யஸ்ரீ.

Related Posts

Leave a Comment