சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 23ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும் என்றும், அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக – புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், “இன்று ( 19.11.22) தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், நாளை ( 20.11.2022) ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக – புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21.11.2022 மற்றும் 22.11.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக – புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 23ம் தேதி மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், வட தமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்”என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.