கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தலைமறைவாக இருக்கும் மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன .
முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இருக்கும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட சவ்வு விலகல் பிரச்சனையால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல , அங்கே மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால், அலட்சியத்தினால் அவர் இரண்டு கால்களையும் இழந்து உயிரையும் இழந்து விட்டார்.
இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
பிரியாவின் மரணத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவில் மாற்றம் செய்யப்பட்டது. சந்தேக மரணம் என்கிற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கையும் தொடங்கும் என்று பெரவள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியாவின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் தங்களை கைது செய்யாமல் இருக்க கோரி முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. தங்களின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விட்டதால் மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டார்கள்.
தலைமறைவாகிவிட்ட இந்த மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் இந்த மூன்று அடிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.