தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீஎ செல்வம் திமுக அரசை வலியறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆண்டு தொகுதி 2 மற்றும் 2 A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர். இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண் பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்கள் பிரதானத் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து அதற்கான முடிவினையும் வெளியிட்டது.
இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளையும், தாங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கித் தேர்வுகளை நடத்தும் அமைப்புகள் ஆகியவை தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே, ஒவ்வொருவரும், ஒவ்வொரு பாடத்தில் பெற்ற மதிப்பெண்களையும் வெளியிடுவது வழக்கம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், தற்போதைய குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களின் விவரம் வெளியிடப்படவில்லை. ஒருவேளை, முதல் நிலைத் தேர்வு என்பதால் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை. இதன் காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பிரதானத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.
இது மட்டுமல்லாமல், அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் தங்களுக்கு ஓர் அடிப்படையாக அமையும் என்றும் தேர்வு எழுதியவர்கள் கருதுகிறார்கள். மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தத் தேர்வாக இருந்தாலும், அதில் வெளிப்படைத் தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதிய ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை வெளியிடுவதுதான் பொருத்தமான ஒன்று என்பது அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வில் தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்களை வெளியிடத் தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதன் மதிப்பெண்களை ஒளிவுமறைவின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.