சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
தேவனுஞ் சித்த குருவு முபாயத்துள்
யாவையின் மூன்றா யினகண் டுரையவே
மூவா பசுபாச மாற்றிய முத்திப்பா
லாவையு நல்குங் குருபரனன் புற்றே.
விளக்கம்:
அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு குருவாகவும் அவரே வழிகாட்டி உள்ளே இருந்து அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில் பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால் ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை கொடுத்து அருளும் குருவாக பரம்பொருளே இருப்பது அடியவர்களின் மீது கொண்ட அன்பினால் ஆகும்.