உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலித்தீவில் ஜி-20 நாடுகளின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாலித் தீவு சென்ற பிரதமர் மோடியை இந்தோனேஷிய அதிபர் ஜேகோ விடோடோ வரவேற்றார். இன்றும், நாளையும் உலகத்தலைவர்கள் பங்கேற்கும் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, உலகின் தற்போதைய முக்கியமான தேவை அமைதி தான் வலியுறுத்தினார்.
உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து உக்ரைனில் போர் நிறுத்தமும், அமைதியும் மலர்வதற்கான வழியை காண வேண்டும் என தான் திரும்ப திரும்ப வலியுறுத்திவருவாதக கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரால் உலகம் பேரழிவை சந்தித்ததற்குப் பிறகு அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதியும் வளமும் திரும்புவதற்கு மிகவும் வலுவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். அந்த தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது எனக் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய உலகத்தை கட்டமைக்க வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது என்றும், அதற்கான கடமை நமது தோளில் ஏற்றப்பட்டுள்ளது என்றும் பேசிய மோடி, புத்தரும் காந்தியும் பிறந்த புனித மண்ணில் அடுத்த ஜி-20 மாநாடு நடக்கும் போது, உலக அமைதிக்கு நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்வோம் என்றார்.
இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியாஈ இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதிஅரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வருகை தந்துள்ளார். ஜோ பைடன் உள்ளிட்ட உலகின் முக்கியத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தோனேஷியாவின் பாலித்தீவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சாாபில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியை இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.