மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், சாமர்த்தியமாக செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சி, அங்கிருந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில், 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு கட்டமாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் பாஜா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதேபோல் தேசிய மக்கள் கட்சி 7 இடங்களிலும், ஜனதா தளம் 6 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் அம்மாநில ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.