பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, ஆன்லைன் வழியில் கடந்த பிப்ரவரியில் தொடங்கி மார்ச் 12-ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில் அதில், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் சுமார் 10,000-க்கும் அதிகமான மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்திருந்தாலும் அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய கூடாது என்ற உத்தரவு பற்றிய கேள்விக்கு விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றதாகவும், காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மாணவர்கள் வீடுகளில் இருந்து தேர்வெழுதி அதை உடனடியாக வாட்ஸ்அப் அல்லது இ-மெயில் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், இணையதள கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் 1 1/2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினர். உரிய கால அவகாசம் வழங்கியும் அதற்குள்ளாக விடைத்தாள்களை பதிவேற்றாமல் பிற்பகல் 2 மணிக்கு மேல் விடைத்தாள்களை அனுப்பி வைத்த காரணத்தால், அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும், அந்த மாணவர்களுக்கு ஆப்செண்ட் என்று குறிப்பிடப்பட்டே முடிவுகள் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.