பங்குச் சந்தைகளில் தொடரும் காளையின் ஆதிக்கம்.. 4 தினங்களில் சென்செக்ஸ் 2,314 புள்ளிகள் உயர்வு…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 2,314 புள்ளிகள் உயர்ந்தது.

ஹோலி பண்டிகை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. இதனால் இந்த 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் (திங்கள், புதன், வியாழன்) பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, நம் நாட்டின் கடந்த பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்த வார பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.260.39 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 11) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.252.82 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் .முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.7.57 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,313.63 புள்ளிகள் உயர்ந்து 57,863.93 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 656.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,287.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment