பிரித்தானிய- ஈரானிய பிரஜைகளான நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல ஆண்டுகளாக ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) 01:00 மணிக்குப் பிறகு ஒக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஆர்.ஏ.எஃப். பிரைஸ் நார்டனில் இருவரும் தரை இறங்கினர்.
பிரித்தானிய மற்றும் ஈரானிய அரசாங்கங்களுக்கு இடையில், பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நல்ல உற்சாகத்துடன் விமானத்தை விட்டு வெளியேறிய பிறகு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்புகளுக்காக அவர்கள் தங்கள் குடும்பத்தினரை விமான நிலையத்தில் சந்தித்தனர்.
43 வயதான ஸாகரி ராட்க்ளிஃப் மற்றும் 67 வயதான அஷூரி ஆகியோர் புதன்கிழமை விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து ஓமன் வழியாக பிரித்தானியா புறப்பட்டனர்.
பிரித்தானிய அரசாங்கம் ஈரானுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் பவுண்டுகள் வரலாற்றுக் கடனைத் தீர்த்த பிறகு அவர்களின் விடுதலை உறுதிப்படுத்தப்பட்டது.
தொம்சன் ரொய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் திட்ட மேலாளரான ஸாகரி ராட்க்ளிஃப், கடந்த 2016ஆம் ஆண்டு ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது அவர் சிறைபிடிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும், ஓராண்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற சிவில் இன்ஜினியர் அஷூரி, 2017ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.