அந்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும், 30 சதவீதத்திற்கும் அதிகமான தீவிர சிகிச்சை பிரிவுகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தென்கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு நோய்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் ஒமைக்ரான் பரவல் இருந்த போதிலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு செய்திகுறிப்பில், நேற்றைய தினம் மட்டும் அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் 293 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாள் பாதிப்பும் 4 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அந்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும், 30 சதவீதத்திற்கும் அதிகமான தீவிர சிகிச்சை பிரிவுகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், வரும் வாரங்களில் மருத்துவமனை அமைப்பில் சிரமங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக மூத்த சுகாதார அமைச்சக அதிகாரி பார்க் ஹியாங் கூறும்போது, நாட்டில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதை விட குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கையுடன் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
தென்கொரியாவில் 62 சதவீதத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அண்மையில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு, உணவகங்கள் உள்ளிட்ட நெரிசலான இடங்களுக்குள் செல்லும் போது தடுப்பூசி சான்றிதழ் காட்டுவது அவசியம் என்றிருந்த கட்டுப்பாடு போன்றவைகளை சுகாதார அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர்.
தொடர்ந்து, அந்நாட்டில் மருத்துவமனை இடங்களை தற்காத்துக்கொள்ள, லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பை விரைவாக கண்டறியும் வகையில் ரேபிட் ஆன்டிஜென் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மாத இறுதிக்குள் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பதிவாகும். குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், ஜிலின், ஷென்சென், டங்குவான் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் சீனா பல நகரங்களை முடக்கி வருகிறது. அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்கரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என சீன அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.