சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (09.03.2022) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (10.03.2022) முதல் வெள்ளிக் கிழமை (11.03.2022) வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 12 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காயல்பட்டினம் (தூத்துக்குடி) 7, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 2, சாத்தான்குளம் (தூத்துக்குடி) 1 என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வுமையம், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகினர். காலை 8 மணியை கடந்தும் பனிமூட்டம் நீடித்த நிலையில், சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
மேலும், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்கினர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் பல கிராமங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.