இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 29 ரன்களும், மயங் அகர்வால் 33 ரன்களும் எடுத்தனர். இனையடுத்து களமிறங்கிய ஹனுமா விஹாரி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிளந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்தாக களமிறங்கிய ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்களில் இலங்கை பந்துவீச்சாளர் லக்மல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 27 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஸ்வின் 61 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஜடேஜா 175 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது.