வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்விதுறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உடற்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உடற்கல்வி வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
மாணவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க, உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உலக உடற்திறனாய்வு தேர்வை, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு, கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ – மாணவியரை இரு அணிகளாக பிரித்து, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளை விளையாட வைத்து, ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கேற்க பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக்கான பாட குறிப்புகள், விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி, விளையாட வைத்த பதிவேடு, உடல் திறனாய்வு தேர்வு பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை முறைப்படி பராமரித்து, அதிகாரி களின் ஆய்வில் சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்.