வனிதா, பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய பின் அளித்த முதல் பேட்டியில், கமல் மீது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் வெற்றிகரமாக நான்கு வாரங்கள் முடிந்து ஐந்தாவது வாரமாக 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. சீசன் 1 லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2 லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் யாரும் எதிர்பார்க்காதபடி சுஜா வெளியேறினார் மற்றும் மூன்றாவது வாரம், டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபிநய் எலிமினேட் ஆனார்கள். டபுள் எவிக்ஷன் முடிந்த பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஐந்து சீசன்களாக தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், திரைப்படங்களில் கமிட் ஆகி இருப்பதால் இனி பிக்பாஸ் அல்டிமேட்டைத் தொகுத்து வழங்க முடியாது என்றும் சீசன் 6 ல் சந்திக்கலாம் என்றும் போட்டியாளர்களிடமே கூறிவிட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கி வருகிறார்.
கமல் வெளியேறிய அடுத்த வாரமே வனிதா வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு தனக்கு தான் விரும்பாத போட்டியாளர்கள் மீது பல்வேறு விதமான அவதூறுகளை வனிதா பரப்பி வந்திருந்தார். ஆனால், நான்காவது வாரத்தில், வனிதாவுக்கு ஆதரவளித்த அனைத்து போட்டியாளர்களும் அவருக்கு எதிராக திரும்பியதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள், முதுகில் குத்துகிறார்கள், இழிவாக நினைக்கிறார்கள் என்று பல்வேறு வித பலவித குற்றச்சாட்டுகளை முன்வைத்து 22 ஆம் தேதி வனிதா விஜயகுமார் தானாகவே போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு, மீடியா சேனல்களுக்கு பேட்டி அளிப்பார்கள். தானாகவே வெளியேறிய வனிதா எப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா, பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய பின் அளித்த முதல் பேட்டியில், கமல் மீது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தற்போது வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில், கமல் திரைப்பட ஷூட்டிங் இருப்பது என்ற காரணத்தால் வெளியேறவில்லை. விக்ரம் திரைப்படத்தின் தயாரிப்பாளரே கமலஹாசன் தான், எனவே அவரால் நான்கைந்து நாட்கள் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு ஒதுக்க முடியாமல் போகக் கூடிய நெருக்கடி இல்லை. ஏன் விலக வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் வனிதா. நிகழ்ச்சி செல்லும் போக்கு தவறாக இருக்கிறது என்றும், அதை கமல் விரும்பவில்லை என்பதால் வெளியேறி இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி, நிகழ்ச்சி தவறாக செல்வதாக தானும் உணர்ந்ததாகவும், மிகவும் மன அழுத்தத்தில் இருந்த காரணத்தாலும் வெளியேறினார் என்று கூறியுள்ளார்.