வன விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இந்த நாள் மூலமாக ஏற்படுத்தப்படுகிறது.
உயிர் சூழலியலை கட்டமைப்பதில் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. நிலையான வளர்ச்சியை நோக்கிய மரபு ரீதியான மாற்றங்கள், சமூக, பொருளாதார மாற்றங்கள், கல்வி மற்றும் மனிதர்களின் நலனுக்கான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் அவை உறுதுணையாக இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. வனங்களில் உள்ள மிக அழகான பல்வேறு உயிரினங்களை கொண்டாடுவதற்கு இது உகந்த நாளாக இருக்கிறது. வன விலங்குகளையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இந்த நாள் மூலமாக ஏற்படுத்தப்படுகிறது.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
ஐ.நா. அமைப்பின் பொதுச்சபை கூட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அன்று நடைபெற்றபோது, மார்ச் 3ஆம் தேதியை உலக வனவிலங்கு தினமாக அனுசரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அழியும் நிலையில் உள்ள வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. வனவிலங்கு தொடர்பாக சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தினங்களில் இது மிக முக்கியமான நாள் ஆகும்.
ஆபத்து பட்டியலில் உள்ள வனவிலங்கு உயிரினங்கள்:
வனவிலங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களில் ஏறத்தாழ 8,000 வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஐ.நா. அமைப்பு கடைப்பிடிக்கும் வறுமை ஒழிப்பு, நில வளங்களை பாதுகாப்பது மற்றும் நீடித்த வகையில் பயன்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளைப் போலவே, அழ்வின் விழிம்பில் உள்ள உயிரினங்களை காப்பதற்கும் ஐ.நா. அமைப்பு உறுதி பூண்டுள்ளது.
உலக வனவிலங்கு தினம்: நோக்கம்
உயிர் சூழலியலுக்கு மிகவும் இன்றியமையாத உயிரினங்களாக இருப்பவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்பதே உலக வனவிலங்கு தினத்தின் பிரதான நோக்கம் ஆகும். அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பதற்கான செயல்திட்டம் உருவாக்குவது இந்த நாளின் நோக்கம் ஆகும். இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தை அனுசரிக்கும்போது, அதிக ஆபத்தில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமாக வனவிலங்கு மற்றும் தாவரங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலியலை மேம்படுத்தவும், மனிதர்களின் நீடித்த தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் முடிந்த வகையில் வனங்களை காக்க இந்த நாளில் உறுதியேற்று கொள்ளலாம். குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.