இந்து கடவுளான சிவனுக்கே பக்தர்கள் அதிகம். சிவனின் ஆக்ரோஷம் அனைவருக்கும் ஒருவித உள கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில் மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் விடிய விடிய கொட்ட கொட்ட முழித்து விரதம் இருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை இந்த மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதியில் தான் இந்த சிவராத்திரி வரும். அந்த வகையில் 2022 மார்ச் 1ஆம் தேதி, அதாவது நாளை மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டமானது நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்களும் வந்து சிவனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களில் அவசர பணிகளைக் கவனிக்கும் நோக்கில் தேவையான பணியாளர்களைக் கொண்டு செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் மார்ச் 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஏற்கெனவே அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4ஆம் தேதியும் குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.