கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும் அல்லது கர்ப்ப காலத்தின் முதல் கட்டத்தில் இருக்கும் பெண்கள் வாழ்க்கை முறையில் சில மாறுதல்களைச் செய்தால் போதும், கர்ப்பம் தரிப்பது மற்றும் கர்ப்ப காலம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பம் தரித்த பிறகு வாழ்வியல் மாற்றம் மேற்கொள்வதைக் காட்டிலும், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றவற்றின் மூலம் கர்ப்பம் தரிப்பதை எளிமையாக்கலாம், கர்ப்பமான பிறகு குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு போன்ற பிரச்னைகள் உள்ளதா என்று ஆய்வு செய்து, அதை சரி செய்ய வேண்டும்.
மருத்துவர் பரிந்துரைப்படி ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும், கரு ஆரோக்கியமாக வளர இவை துணை செய்யும்.
சிகரெட் பழக்கம் கணவனுக்கு இருந்தால் அது கூட கர்ப்பிணியைப் பாதிக்கலாம். ஒருவர் புகைத்து வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் சிகரெட் புகைத்த அளவுக்கு பாதிப்பு இருக்கும். இது கருச்சிதைவு, குறைப் பிரசவம், குழந்தை உடல் எடைக் குறைவு, குழந்தையின் சுவாச மண்டலத்தில் பாதிப்பு என பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
சரிவிகித சத்தான உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முழு தானியங்கள், காய்கறி – பழங்கள் சாலட், நட்ஸ், பயிறு வகைகள், பாதாம், வால்நட் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆசை இருந்தால் எப்போதாவது கேக், பீட்சா போன்ற ஜங்க் ஃபுட் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், தினசரி அதையே உணவாக சாப்பிடுவது தாய் மற்றும் சேய் என இருவருக்கும் ஆபத்தாக முடியும். ஜங்க் ஃபுட்டில் அதிக கார்போஹைட்ரேட், சோடியம், பதப்படுத்திகள் இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் சீரின்மை இருக்கும். அதிக கலோரி கொண்ட உணவுகள் உட்கொள்வது கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடலாம்.
உடற்பயிற்சி செய்யலாமா என்பதை மருத்துவர் ஆலோசனை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள், யோகா, சுக பிரசவத்துக்கான பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தியானம் போன்றவற்றைச் செய்யலாம். இவை உடலை உறுதியாக்கும். மனதுக்கும் அமைதியைத் தரும்.