உக்ரைன் ரஷியா போர்: 198 பேர் உயிரிழப்பு.. சிக்கியிருந்த 250 இந்தியர்கள் மீட்பு

by Editor News

உக்ரைன் ரஷியா போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாட்டின் அதிபர்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறினாலும் போர் முடிவுக்கு வராமல் உள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். தொடர் தாக்குதலில், ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், 3-வது நாளான நேற்றைய தினத்தில் உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷியா தெரிவித்து உள்ளது. உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் அறிவித்து உள்ளது.

ரஷிய படையெடுப்பினால், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்து இருக்கிறார். தற்போது, உக்ரைன் சுகாதார மந்திரி விக்டர் லையாஷ்கோ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், 3 வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் போரில் 1,115 உக்ரைனியர்கள் காயமடைந்து உள்ளனர்.

அவர்களில் மொத்தம் 33 பேர் குழந்தைகள். ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேரை இதுவரை இழந்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

மேலும், உக்ரைனில் சிக்கியிருந்த 250 இந்தியர்களை 2வது விமானம் மூலம் அழைத்து வரப்ப்பட்டு அவர்களை உடல்நிலை பரிசோதனை செய்து விமான நிலையத்திலேயே தனி இடம் ஒதுக்கி அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலும் மாணவ, மாணவிகளே வந்திருந்தனர்.

Related Posts

Leave a Comment