அய்யா வைகுண்டர் அவதார தினத்தை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
சாதி மத பேதங்கள் அதிகரித்து இருந்த காலத்தில் சாதி, சமய, பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும், போதித்தவர் அய்யா வைகுண்டர். சாதாரண மனிதராக திருச்சம்பதியில் அவதரித்து மூன்று நாட்கள் கடலுக்குள் இருந்து, விஷ்ணு மகாலட்சுமி அருளோடு வைகுண்டர் என்ற திருநாமம் பெற்று மக்களுக்கு அருள் புரிய வந்த தினமே அய்யா வைகுண்டர் அவதார தினம் என்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 190ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி அய்யாவின் வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர். இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.
இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி மார்ச் 4ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் , வங்கிகள் ஆகியவற்றிற்கும் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து அரசு கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அவசர பணிகளை கவனிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 12-ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.