உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் ஒருபகுதியாக கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டது. அத்துடன் உக்ரைனை கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் அடுத்த ஆட்டமாக உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து காப்பற்றிக்கொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உறுப்பு நாடாக சேர உக்ரைன் நினைக்க, இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இதை எதிர்க்கும் ரஷ்யா போர் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிட்டு ராணுவ வீரர்களை குவித்தது. எந்நேரமும் ரஷ்யா உக்ரைனை தாக்கக்கூடும் என்பதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிட்டார் . உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க், டன்ட்ஸ்க் மாநிலங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
2 மாநிலங்களிலும் ரஷ்ய படைகள் நுழைவதற்கும் புடின் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் குண்டு மழை பொழிய ரஷ்ய ராணுவ படைகள் தொடங்கின. பிறகு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்கையையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே உக்ரைன் – ரஷ்யா விவகாரம் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம் தொடங்கியது. உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில் உக்ரைன் ரஷ்ய படைகள் தாக்குவதை அதிபர் விளாடிமிர் புடின் தடுத்து நிறுத்தவேண்டும் . பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒரு வாய்ப்பு தர வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.