“கையே தூக்காத சிஎஸ்கே, மும்பை… இறங்கி ஆடும் ராஜஸ்தான்” – இதுவரை ஏலத்தில் நடந்தது என்ன?

by Column Editor

ஐபிஎல் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்துள்ளது ஐபிஎல் மெகா ஏலம் 2022. இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மெகா ஏலத்தில் மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 590 வீரர்களில் 228 பழைய வீரர்களும், 355 புதிய வீரர்களும் உள்ளனர். இந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத் என கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்துள்ளன. இதனால் ஏலத்தில் முக்கிய வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏலத்தில் உச்சக்கட்ட அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 48 வீரர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளனர். தவான், ஷமி, டு பிளெசிஸ், வார்னர், கம்மின்ஸ், ஷ்ரேயாஸ், அஷ்வின், டி காக், ரபாடா போல்ட் உள்ளிட்டவர்கள் இந்த பிரிவில் இடம்பெற்றிருந்தனர். அதேபோல் ரூ.1.5 கோடி பிரிவில் 20 வீரர்களும் ரூ.1 கோடி பிரிவில் 34 வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். அதிக விலை போகும் இந்த மூன்று பிரிவுகளிலும் 102 வீரர்கள் உள்ளனர்.

இவர்களை ஏலம் எடுக்கவே கடும் போட்டி நிலவும் என கூறப்பட்டது. குறிப்பாக கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு கேப்டன்கள் தேவைப்பட்டனர். புதிய அணிகள் இனி தான் பிரெஸ்ஸாக அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற நிலை. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முக்கிய வீரர்களை தக்கவைக்க போராட வேண்டிய கட்டாயம். இவ்வாறு பல்வேறு திருப்பங்களுடன் நகர்ந்த ஏலத்தில் இதுவரை என்ன நடந்தது. எந்த அணி எந்தெந்த வீரர்களை ஏலம் எடுத்தது? யார் அதிக விலைக்கு போனார்கள் என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

சிஎஸ்கே – ராபின் உத்தப்பா (ரூ.2 கோடி), பிராவோ (ரூ.4.40 கோடி)

பஞ்சாப் – தவான் (ரூ.8.25 கோடி), ரபாடா (ரூ.9.25)

ஆர்சிபி – டுபிளெசிஸ் (ரூ.7 கோடி) ஹர்சல் படேல் (ரூ.10.75 கோடி)

கேகேஆர் – ஸ்ரேயாஷ் ஐயர் (ரூ.12.25 கோடி) கம்மின்ஸ் (ரூ.7.25 கோடி), நிதிஷ் ராணா (ரூ.8 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ் – போல்ட் (ரூ.8 கோடி), அஸ்வின் (ரூ.5 கோடி), ஹெட்மைர் (ரூ.8.50 கோடி), தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி)

டெல்லி – டேவிட் வார்னர் (ரூ.6.25 கோடி)

லக்னோ சூப்பர்ஜெயிண்ட்ஸ் – டி காக் (ரூ.6.75 கோடி), மணீஷ் பாண்டே (ரூ.4.60 கோடி), ஹோல்டர் (ரூ.8.75 கோடி), தீபக் ஹூடா (ரூ.5.75 கோடி)

இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்களில் ஸ்ரேயாஷ் ஐயரே முதலிடத்தில் இருக்கிறார். ஆச்சரியமளிக்கும் விதமாக பிளெசிஸை சிஎஸ்கே விட்டுக்கொடுத்துள்ளது. ரெய்னாவை வாங்காமல் போனது எதிர்பார்த்த ஒன்று தான். டி காக், போல்ட்டை ஆகிய முக்கிய வீரர்களை மும்பை கைகழுவியுள்ளது. குறிப்பாக கடந்த ஏலத்தில் ரூ.20 லட்சம் என ஏலம் போன ஹர்சல் படேல் கடந்த சீசனில் பர்பில் கேப் வென்றதால் ரூ.10.75 கோடிக்கு படேலை ஆர்சிபி தக்கவைத்துள்ளது.

அதேபோல வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹோல்டர் ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.8.75 கோடிக்கு லக்னோ அணிக்கு ஏலம் போயுள்ளார். பெரிய விலைக்கு போவார் என எதிர்பார்த்த வார்னரை டெல்லி குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டுள்ளது. இதில் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியா பெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கில்லர் மில்லர் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை.

Related Posts

Leave a Comment