ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெகா ஏலம் இன்று பெங்களூருவில் தொடங்கிவிட்டது. புதிதாக 2 அணிகள் வந்துவிட்டதாலும் ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்கு கேப்டன் பொறுப்புக்கு யாரும் இல்லாததாலும் முக்கிய வீரர்கள் பெரும் தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தவான், ஷமி, டு பிளெசிஸ், வார்னர், கம்மின்ஸ், ஷ்ரேயாஸ், அஷ்வின், டி காக், ரபாடா, போல்ட் பெரிய விலைக்கு ஏலம் போகலாம் என கூறப்பட்டது.
அதன்படி ஏலத்தில் முதல் வீரராக டெல்லி அணியின் முன்னாள் வீரர் ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எடுப்பதற்கு ராஜஸ்தான், கேகேஆர், பஞ்சாப் ஆகிய அணிகள் கடும் போட்டி போட்டன. டெல்லி அணியும் அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டியது. ஆனால் இறுதியில் பஞ்சாப் அணி ஷிகார் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவர்களின் முன்னாள் கேப்டனும் தொடக்க வீரருமான கேஎல் ராகுல் புதிய அணியான லக்னோவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதால் தவானை இவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டது.
மூத்த வீரர், அனுபவ வீரர் என்பதால் தவானை கேப்டனாக்கவும் பஞ்சாப் ஆலோசிக்கும் என சொல்லப்படுகிறது. அவர் ஏற்கெனவே டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். அதேபோல அஸ்வினை 2018ஆம் ஆண்டு டெல்லி அணி ரூ.7.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் இம்முறை அவரை தக்கவைக்கவில்லை. அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் என்பதால் பெரிய விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணி அவரை மீண்டும் ஏலம் எடுக்கலாம் என சொல்லப்பட்டது.
இருப்பினும் எந்த அணியும் பெரிதாக விரும்பவில்லை. கடைசியில் ராஜஸ்தான் ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்ததாக ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ். இவர் பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி கைவரிசையை காட்டுபவர். கடந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் ரூ.15.5 கோடிக்கு விலை போனார். கேகேஆர் அணி அவரை வாங்கியது. ஆனால் அந்த தொகைக்கு அவர் வொர்த் இல்லை என்று நினைத்தோ தெரியவில்லை. அவரை இம்முறை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் விட்டு குறைந்த தொகையில் எடுக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
அதை போலவே ரூ.7.25 கோடிக்கு கேகேஆர் கம்மின்ஸை தக்கவைத்தது. கம்மின்ஸுக்கு பல அணிகள் போட்டி போட்டாலும் இதற்கு மேல் கொடுக்க எந்த அணியும் முன்வரதாதால் கேகேஆரே மீண்டும் வாங்கியுள்ளது. இது கேகேஆரின் நல்ல யுக்தியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதன்மூலம் அந்த அணிக்கு ரூ.8 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. கம்மின்ஸும் திரும்ப கிடைத்துள்ளார். டெல்லியின் மற்றொரு முக்கிய வீரர் ரபாடா. இவரை டெல்லி தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழற்றிவிட்டது. ஆனால் தவானை போல ரபாடாவையும் ரூ.9.25 கோடிக்கு தட்டித்தூக்கியது.