ரயில் பயணம் இனிமையானது தான். அலாதியானது தான். ஆனால் கவுண்டரில் கால் கடுக்க நின்று டிக்கெட் பெறுவது தான் கொடுமையானது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலைக்காக செல்லும் வேளையில் ரயில் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் தாமாகவே தாங்கள் செல்லும் இடங்களைப் பதிவுசெய்து டிக்கெட்டுகளை பெற முடியும்.
தற்போது இதில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துதி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே விரிவுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “QR கோடு மூலம் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் டிக்கெட், நடைமேடை டிக்கெட்களை பெறலாம். சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டார்ட் கார்டு, BHIM UPI QR கோடு, Paytm, Phonepe ஆகியவற்றின் QR கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முழு விளக்கத்தையும் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் திரையில் காணும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும இதுதொடர்பான தகவல்களைப் பெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். QR கோடு முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.