2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்றும் , நாளையும் ( பிப் 12, 13) பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. முதல் நாளான இன்று ( சனிக்கிழமை ) 161 வீரா்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனா்.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸஸ் ஹைதராபாத், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் ஐபிஎஸ் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் ஆகிய 2 அணிகள் களம் காண இருக்கின்றன. அதன்படி இந்த 2 அணிகள் புதிதாக இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
மொத்தமாக 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்ற நிலையில், ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரா்கள். இந்த முறை ஏலத்தில் இந்திய இளம் வீரா்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக ஷ்ரேயஸ் ஐயா், ஷா்துல் தாக்குா், தீபக் சஹா், இஷான் கிஷண் உள்ளிட்ட வீரா்களுக்கான எதிா்பாா்ப்பு வலுத்திருக்கிறது. வெளிநாட்டு வீரா்களைப் பொருத்தவரை டேவிட் வாா்னா், குவின்டன் டி காக், ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டா் ஆகியோருக்கு பலத்த கிராக்கி இருக்கும் என கூறப்படுகிறது.
வீரா்களுக்கான அடிப்படை விலை ரூ.2 கோடி முதல் ரூ.20 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணி ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், டோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் செலவிட்டு அவர்களை தக்க வைத்திருக்கிறது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.48 கோடியுடன் ஏலத்திற்கு வருகிறது.
அதேபோல், டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.47.5 கோடியுடனும், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ஆகியவை ரூ.48 கோடியுடனும், குஜராத் டைட்டன்ஸ் ரூ.52 கோடியுடனும் இத ஏலத்துக்கு வருகின்றன. மேலும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ரூ.57 கோடியுடனும், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் ரூ.59 கோடியுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.62 கோடியுடனும், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் ரூ.68 கோடியுடனும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.72 கோடியுடனும் ஏலத்தில் பங்கேற்கின்றன.