இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 773 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
அமெரிக்காவில் 1982ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சகட்டமாக உள்ளது. இதனால் அந்நாட்டு ரிசர்வ் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, என்.டி.பி.சி., மகிந்திரா, ஐ.டி.சி. மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய 5 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 934 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,375 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 99 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.263.80 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.96 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 773.11 புள்ளிகள் குறைந்து 58,152.92 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 231.10 புள்ளிகள் சரிவு கண்டு 17,374.75 புள்ளிகளில் முடிவுற்றது.