சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 ஆம் தேதியான இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
12 ஆம் தேதியை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யலாம். டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யலாம். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதியை பொருத்தவரையில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் 8 சென்டி மீட்டர் மழையும், வேதாரண்யத்தில் ஏழு செண்டி மீட்டர் மழையும், திருப்பூண்டியில் 5 சென்டி மீட்டர் மழையும், வேளாங்கண்ணியில் 4 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்கால், திருக்குவளை பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 11 ஆம் தேதியான இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். இதனால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் தேதியை பொறுத்தவரையில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.