இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்ப்பட்டது. ஆனால் ஆச்சரியமாக முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. இது பங்குச் சந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. மேலும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில். மாருதி மற்றும் நெஸ்லே உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,563 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,778 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 107 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.267.76 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.11 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 460.06 புள்ளிகள் உயர்ந்து 58,926.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 142.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,605.85 புள்ளிகளில் முடிவுற்றது.