தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் ரூ.336 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடணந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற போதே, ஊரக பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனை செயல்படுத்தக் கூடிய வகையில் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 114 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளித்திருப்பதோடு, தற்போது ரூ. 336 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே கிராம ஊரக வேலை வாய்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும், நபர்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த பாலங்கள் கட்டப்பட உள்ளன. ரூ. 336 கோடியில் முதல்கட்டமாக தற்போது ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள தொகை நடப்பாண்டிலேயே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் , ஈரோடு, கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த புதிய பாலம் கட்டப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணியை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு பாலம் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.