மார்ச் 12ல் நடைபெற இருந்த முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த தாமதமானது. இதனால் கலந்தாய்வும் தள்ளிப்போனது. மேலும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் உயர்சாதி ஏழையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், 2021 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கயந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஒபிசி பிரிவினருக்கு 27 % இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்து, கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு மார்ச் 11 மற்றும் மார்ச் 16 தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் 2022 ம் ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே, 2022 ஆம் ஆண்டு முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேதிகளில் உள்ள குளறுபடிகள் காரணமாக மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மார்ச் 12 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.