நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 30 ஆயிரத்து 29 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4-ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் பார்வையாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் மதியம் 3 மணிக்கு ஆலோசனைநடத்தவுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்துகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம், பேரணி நடத்த கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.