இன்றைக்கு எல்லா வீடுகளிலும் கற்றாழையை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு அதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் அது அளிக்கும் பலன்களே காரணம். அதிசயமிக்க ஆச்சரியப்படத் தக்க பலன்களைக் கொண்ட தாவரமாகக் கற்றாழை விளங்குகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், சர்க்கரை, என்சைம், சாலிசிலிக் அமிலம், அமினோ அமிலம் என சருமத்துக்குத் தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன.
எல்லா வகையான சரும பிரச்னைக்கும் ஒரே தீர்வு என்று கூறும் வகையில் கற்றாழை விளங்குகிறது. உலக அளவில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு அழகு சாதன பொருட்கள் தயாரிக்கக் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.
உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு கற்றாழை மிகச் சிறந்த தீர்வை வளங்குகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதுடன் சருமத்துக்கு பொலிவை அளிக்கிறது. சருமத்தின் வறட்சியை போக்குவதுடன் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டுகிறது. மேலும் சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஃபபர்களைத் தூண்டி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.
சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், கருவளையம் உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்குகிறது. சரும கரும் புள்ளிகளின் நிறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மங்கச் செய்து நீக்குகிறது. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதால் கருவளையம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.
ஆன்டி-இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட கற்றாழை, சருமத்தை குளிர்விக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள ரசாயனம் சருமத்தை மென்மையாக்குகிறது. இதனால் முகப்பரு, கட்டி போன்றவை நீங்குகிறது. வெயில் காலத்தில் தினமும் கற்றாழையைச் சருமத்தில் பூசி வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
அனைத்துக்கும் மேலாகக் கற்றாழை சருமத்தின் இளமையைத் தக்க வைக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதின் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கம், தளர்ச்சி போன்றவற்றை நீக்குகிறது. கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, இ, பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்தும்.
கற்றாழை அழகுக்கு மட்டுமல்ல நுண்ணுயிர்க் கொல்லியாகவும் செயல்படுகிறது. சருமத்தில் முகப்பருவுக்குக் காரணமாக உள்ள பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவற்றை அகற்றி, இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவுடன், அழகாக, மென்மையாக இருக்கச் செய்கிறது. சருமத்தில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.