தங்குமிடம், உணவு, பயண நாட்கள், பார்க்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு காலதாமதம் செய்யாமல் செயல்படுவது மன நிறைவாக பயணத்தை முடிப்பதற்கு வழிவகை செய்யும்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக பயணம் செய்வது பிரபலமாகி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறை பெண்கள் பலர் தனிமை பயணத்தை விரும்புகிறார்கள். அது புதிய இடங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், வெளி உலக தொடர்பை மன தைரியத்துடன் வளர்த்துக்கொள்ளும் ஆற்றலையும், சுதந்திர உணர்வையும் வழங்குவதாக அமைந்திருக்கிறது.
பெண் ஒருவர் தனியாக பயணிப்பதாக இருந்தால் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி அன்றாட தேவைகளுக்கு அவசியமானவை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். பயணத்திற்கான ‘பேக்கிங்’ பணி சற்று கடினமானதாக இருக்கும். அத்தியாவசிய தேவைக்குரிய ஏதாவது ஒரு பொருளை மறந்திருந்தாலும் கூட பயணம் சுவாரசியமாக அமையாது.
முதலில் பேக்கிங் செய்வதற்கான ‘பேக்’ எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். எந்தனை நாட்கள் பயணிக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும் விதமாக ‘பேக்’ அமைந்திருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் இரண்டு மாத பயணத்திற்கு தயாராகிறீர்கள் என்றால் அதிக பொருட்களை எடுத்து செல்ல வேண்டி இருக்கும்.
அதற்காக ‘பேக்’க்குள் அனைத்து பொருட்களையும் திணித்துவிடக்கூடாது. பேக்குக்குள் கொஞ்சமாவது வெற்றிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பயணத்தின்போது நிறைய பொருட்களை வீட்டுக்கு வாங்கிவர முடியும்.
இது ஸ்மார்ட்போன் யுகம். உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கைக்குள் குவித்துவைக்க உதவும் ஸ்மார்ட்போன்தான் உங்களின் பயண தோழியாக விளங்கும். வழிகாட்டுவது முதல், நினைவுகளாக பதிய வைக்கும் புகைப்படங்களாக, வீடியோக்களாக சேமித்து வைப்பது வரை, தனிமை பயணத்தின் நிகழ்வுகள் அத்தனையையும் அதுதான் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் ஸ்மார்ட்போன் எப்போதும் ‘ஆன்’ நிலையிலேயே இருக்க வேண்டும். அதற்கு ‘பேட்டரி பேக்கப்’ கைவசம் இருக்க வேண்டும்.
பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் பவர் பேங்க் மூலம் எளிதாக சார்ஜ் செய்துவிடலாம் என்பதால் அதனை எடுத்து வைக்க மறக்கக்கூடாது. புதிதாக பவர் பேங்க் வாங்குவதாக இருந்தால் அதிக திறன் கொண்டதாக வாங்கிக்கொள்ளலாம். லேப்டாப் உள்ளிட்டவற்றையும் சார்ஜிங் செய்வதற்கு ஏதுவாக வாங்கிக்கொள்வது சிறப்பானது. ஹெட்போனும் பேக்கில் தவறாமல் இடம் பிடித்திருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களின்போது நல்ல இசையை கேட்டு ரசிப்பதைவிட சிறந்த தருணம் எதுவுமில்லை. அது தனிமை சூழலை மறக்கடித்துவிடும்.
பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக சிறு காயங்கள் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏதுவாக மருத்துவ பொருட்கள் அடங்கிய ‘கிட்’ வைத்திருப்பதும் அவசியமானது. சோப், டிஷ்யூபேப்பர், எண்ணெய், ஷாம்பு, நாப்கின், பற்பசை, பிரஷ், சீப்பு முதலிய பொருட்களை மறக்காமல் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
இது கொரோனா காலகட்டம் என்பதால் பயணங்களின்போது ஒருமுறை பயன்படுத்தும் முக கவசம் அணிந்து கொள்வதே சிறந்தது. தினமும் ஒரு முக கவசம் அணிவதற்கு பதிலாக இரண்டு முறை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. சானிடைசர், ஹேண்ட் வாஷ், வரைபடம் போன்றவற்றையும் மறந்துவிடக்கூடாது.
மேக்கப் செய்ய விரும்பினால் பாடி லோஷன், சன்ஸ்கிரீன், லிப் பாம், லிப்ஸ்டிக், காஜல் போன்ற பொருட்களை பையில் எடுத்து வைக்க மறக்காதீர்கள். பையில் ‘லக்கேஜ் டிராக்கரை’யும் வைத்திருக்க வேண்டும். உங்கள் பைகள் காணாமல் போனால், அவை எங்கு உள்ளன என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதனால் திருட்டு, நஷ்டம் போன்ற பயம் வராது. ஆதார் அட்டை, அடையாள அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களையும் பேக்கிங் செய்யும்போது நினைவில் கொள்ளுங்கள்.
இரு சக்கர வாகனமா? காரா? பொது போக்குவரத்தா? என்பதை தீர்மானித்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிட வேண்டும். இரு சக்கர வாகனம், கார் பயன்படுத்துவதாக இருந்தால் சாலை பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் பஞ்சர், டயரில் காற்றழுத்தம் குறைவது போன்றவற்றை நீங்களே சரி செய்துவிடுவதற்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சில அடிப்படை பழுது பார்ப்பு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். தங்குமிடம், உணவு, பயண நாட்கள், பார்க்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு காலதாமதம் செய்யாமல் செயல்படுவது மன நிறைவாக பயணத்தை முடிப்பதற்கு வழிவகை செய்யும்.