தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 27 ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டஇன் கீழ், தமிழகத்தில் மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. இதில் 4,349 மருத்துவ இடங்கள் அரசு கல்லூரிகளிலும், 2,650 மருத்துவ இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களை நிரப்ப, 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,930 பி.டி.எஸ், இடங்களுக்கும் தரவரிசைப் பட்டியலும் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடவுள்ளார். மாணவர்கள் www.tnmedicalselection.net. மற்றும் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜன 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. முதல்முறையாக மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது.
முதல் நாளான ஜன 27 ஆம் தேதி , இராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக கலந்தாய்வு நடக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் 28, 29ம் தேதிகளில் நேரடியாக நடைபெற உள்ளது. இந்த பிரிவில் 436 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக 30ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. அதேபோல் 1,930 இடங்கள் கொண்ட பி.டி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வும் ஜன 30ஆம் தேதி தொடங்குகிறது.