அஜினமோட்டோ, ஃபுட் கலர், எதுவுமே சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரோட்டு கடை காளான் மசாலா, வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரோட்டு கடை காளான் மசாலா என்றால் பெரும்பாலும் அதை முட்டைக்கோசை வைத்து தான் செய்கிறார்கள். வாசத்திற்காக தேவைப்பட்டால் கொஞ்சம் காளான் சேர்த்துக்கொள்ளலாம். காளான் இல்லை என்றாலும் பரவாயில்லை. வெறும் முட்டைக்கோசை வைத்து சூப்பரான ‘காளான் மசாலா’ ரெசிபி உங்களுக்காக.
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1/4 கிலோ, மைதா – 1/2 கப், கான்பிளவர் மாவு – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம்மசாலா – 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு உங்கள் கைகளை வைத்து முதலில் நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் காளான் இருந்தால், வெட்டிய காளான்களை கொஞ்சம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
முட்டைக்கோசை நாம் கழுவி இருப்பதால் அதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் விடும். எல்லா பொருட்களையும் முதலில் நன்றாக கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் தெளித்து இந்த மாவை கொஞ்சம் கெட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். பகோடா சுட்டி எடுக்கும் அளவிற்கு மாவின் பக்குவம் இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் தயாராக பிசைந்து வைத்திருக்கும் முட்டைகோஸ் மாவை சிறிய சிறிய அளவு பக்கோடா போல எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மசாலா செய்ய முட்டைக்கோஸ் பக்கோடா நமக்கு தயாராக உள்ளது. இதை அப்படியே சாப்பிட்டாலும் மொறுமொறுவென கொஞ்சம் ருஸியாக தான் இருக்கும்.
சரி, இப்போது மசாலாவை வைத்து தாளித்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், உப்பு வெங்காயத்திற்க்கு தேவையான அளவு போட்டு, இந்த மசாலாவை நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் தக்காளி பழத்தை வேக வைத்து கொள்ளுங்கள். (உங்கள் வீட்டில் டொமேட்டோ சாஸ் இருந்தால் தக்காளி பழத்திற்கு பதிலாக அதை சேர்த்து வதக்கி விடலாம். இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.)
வெங்காயம் தக்காளி கடாயில் வதங்குவதற்குள், ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவில், 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் இருக்கும் வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இந்த மசாலா கொதித்து வரும்போது லேசாக கட்டியாக தொடங்கும். அப்போது 1 டம்ளர் அளவு தண்ணீரை கடாயில் இருக்கும் மசாலாவுடன் ஊற்றிக் கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்றாகக் கொதி வந்ததும் முதலில் பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் பக்கோடாவை நன்றாக உதிர்த்து இந்த தண்ணீரில் போட்டு அப்படியே கலந்து கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் ரோட்டு கடை காளான் மசாலா நமக்கு கிடைத்துவிடும். இதை சுட சுட அப்படியே ஒரு பௌலில் போட்டு மேலே பச்சையாக வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி தேவைப்பட்டால், மொரு மொரு கான்பிளவர் சிப்ஸ் தூவி அப்படியே குழந்தைகளுக்கு பரிமாறி பாருங்கள். ரோட்டுக் கடையில் வாங்கிய காளான் மசாலா டேஸ்ட் இருக்குன்னு சொல்லுவாங்க.