பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உடலில் காணப்படும் ஒரு சில அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.
சுமூகமான பிரசவம் நடைபெறுவதற்கு பெண்களுக்கு முறையான ஓய்வு மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், சுற்றுப்புறச்சூழல், உடல்நிலை மற்றும் எதிர்பாராத சில செயல்களால் நமக்கு தெரியாமல் உடலில் சில பிரச்சனைகள் எழக்கூடும். அதனால், பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உடலில் காணப்படும் ஒரு சில அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.
கர்ப்ப காலத்தில் வயிறு பிடிப்புகள் இயல்பானது என்றாலும், அதிகமாக இருக்கும் சமயத்தில் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகமான வயிறு பிடிப்பு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மேலும், பிரசவ காலத்துக்கு நெருங்கிய நாட்களில் வயிற்றில் சுருக்கங்கள் ஏற்பட்டால், அது பிரசவத்துக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது.
கர்ப்பம் தரித்த ஆரம்ப நாட்களில் பெரும்பாலான பெண்களுக்கு ரத்தப்போக்கு இருக்கும். இதனைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அதேநேரத்தில் அதிகமான ரத்தப்போக்கு, குறிப்பாக பிரசவத்துக்கு பிறகு அதிகமான ரத்தப்போக்கு இருந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மிகவும் ஆபத்தானது. நஞ்சுக்கொடியை தவறாக கையாளும்பட்சத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எழக்கூடும். இதனால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு வழியாக திரவம் வெளியேறுவது பொதுவானது என்றாலும், அதிகளவு திரவம் வெளியேற்றுவது ஆபத்தானது. உங்கள் பிரசவ தேதிக்கு முன்பாக அதிகளவு திரவம் பிறப்புறுப்பு வழியா வெளியேறினால், பனிக்குடம் உடைந்து குழந்தை விரைவில் வெளியேறுவதற்கான அறிகுறியாக கருதலாம். அதேநேரத்தில், குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்பு ரன்னி திரவம் வெளியேறினால், பிரவசத்தில் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களில் தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஏற்படலாம். ஒரு பொருளை தெளிவாக பார்ப்பதில் சிக்கல் அல்லது அடிக்கடி மங்கலான பார்வை வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாதாரணமாக எடுத்துகொள்ளாமல், சிகிச்சையை விரைவாக எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் பின்விளைவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது சாதாரணமானது என்றாலும் அவை வலி மிகுந்ததாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும். வலி மிகுந்த வீக்கம், வீக்கமடைந்த பகுதி சிவப்பு நிறமாக மாறுதல், தடிப்புகளுடன் காணப்படுதல் ஆகியவை ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த பகுதியில் ரத்தம் கூட உறைந்திருக்கலாம் என்பதால், மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்வது நல்லது. கை, கால் மற்றும் முகங்களில் வீக்கம் இருந்தால் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.